×

இறக்கை அழுகல் நோயால் கோழிகள் இறப்பு அதிகரிப்பு

நாமக்கல், டிச.11: இறக்கை அழுகல் நோயால் கோழிகள் இறப்பு அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், வரும் 3 நாட்களும் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் வேகம் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் 85 சதவீதமாக காணப்படும். வெப்ப அளவுகள் குறைந்து காணப்படும். இந்த மாதத்தில் கோழிகளின் தீவன எடுப்பை கட்டுப்படுத்துவதும், முட்டை உடைவை கட்டுப்படுத்துவதும், மிகவும் சவாலாக பண்ணையாளர்களுக்கு இருக்கும்.

தீவனத்தில் ஜீரணிக்கும் எரிசக்தி அளவை உயர்த்தி வழங்க வேண்டும். சமீபத்தில் பெய்த மழையில் வைக்கோல் மற்றும் சோளத்தட்டில் ஈரத்தின் காரணமாக, பூஞ்சான நச்சு காணப்படும். இவற்றை நன்கு உலர வைத்த பின்பு கொடுப்பதன் மூலம் நச்சு தாக்கத்தில் இருந்து கால்நடைகளை குறிப்பாக கறவை மாடுகளை பாதுகாக்கலாம். இறக்கை அழுகல் நோய் காரணமாக, கோழிகள் அதிக அளவில் இறந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற் போல் கோழிக்கு அளிக்கப்படும் தீவன மூலப்பொருட்களில் கிருமிகளின் தாக்கம் உள்ளதா என பரிசோதனை செய்து, தீவன மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும். சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை உள்ள நிலங்களுக்கு, விளைச்சலை அதிகரிக்க கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை உரமாக இடவேண்டும். இவ்வாறு வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி