×

உள்ளாட்சி தேர்தல் குளறுபடியால் சாலை விபத்து தடுப்பு ஆய்வு கூட்டம் திடீர் ரத்து

நாமக்கல்,  டிச.11:  நாமக்கல்லில் நடைபெற இருந்த சாலை விபத்து தடுப்பு ஆய்வு கூட்டம்  திடீரென ரத்து செய்யப்பட்டதால், கூட்டத்துக்கு வந்திருந்த சங்க  நிர்வாகிகள், அலுவலர்கள் அதிருப்தியடைந்தனர். நாமக்கல் நகரில் சாலை  விபத்துக்களை குறைப்பது தொடர்பான மாததாந்திர ஆய்வு கூட்டம், நேற்று நாமக்கல்  மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில், கோட்டப்பொறியாளர்  சசிகுமார் தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து  கொள்ள, லாரி மற்றும் பஸ் உரிமையாளர்கள் சங்கம், வட்டார போக்குவரத்து  அலுவலர், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் மற்றும் பல்வேறு அரசுத்துறை  அதிகாரிகளுக்கு கோட்டப் பொறியாளர் அலுவலகம் மூலம், கடந்த வாரம் அழைப்பு  கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று காலை, லாரி, பஸ்  உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை  கோட்டப்பொறியாளர் அலுவலகம் சென்றனர். ஆனால் அங்கு கூட்டம் நடைபெறவில்லை.

கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி தேர்தல்  நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைப்படி, ஆய்வு கூட்டம் ரத்து  செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அலுவலகத்தில் இருந்து முன்கூட்டியே  கடிதம் எழுதுவும் வராததால், ஆய்வு கூட்டத்துக்கு வந்த அதிகாரிகள், லாரி,  பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது  அதிருப்தியுடன் திரும்பிச்சென்றனர். மாவட்டத்தில் உயர் பொறுப்பில்  இருக்கும் கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற இருந்த ஆய்வு கூட்டம்  திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்து கூட, முறையாக மற்ற துறைகளுக்கு  தெரிவிக்காத நிலை ஏற்பட உள்ளாட்சி தேர்தல் குளறுபடி தான் காரணம் என  அதிகாரிகள் கூறினார்கள்.

கடந்த வாரம் 6ம் தேதி உள்ளாட்சி தேர்தல் வேட்பு  மனு தாக்கல் துவங்க இருந்தது. ஆனால், கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்றத்தில்  தேர்தல் தொடர்பான வழக்கு இருந்ததால், வேட்பு மனு பெறுவது நிறுத்தப்பட்டது. 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் தேர்தல் அறிவிப்பு வந்தது. ஆனால்,  தேர்தல் நடத்தை நெறிமுறைகள் கடந்த 2ம் தேதி முதல் மாவட்டம்  முழுவதும்அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் இது பற்றி  அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முறைப்படி தெரிவிக்கவில்லை. இந்த   குளறுபடியால் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் கடந்த 6ம் தேதி,  ஆய்வு கூட்டத்துக்கு வரும்படி பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் லாரி, பஸ்  உரிமையாளர் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தன. தற்போது உள்ளாட்சி தேர்தல்  நடப்பதால், ஆய்வு கூட்டத்தை ரத்து செய்து விட்டது.

Tags : Road Accident Prevention Meeting ,
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி