கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதாரக்கேடு

திருப்பூர், டிச. 11: திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் அருகில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுகளால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  திருப்பூர், பல்லடம் பிரதான ரோட்டில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூம்புகார் எனும் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. அவற்றை கலெக்டர் அலுவலகத்திற்காக இடித்துவிட்டு தற்போது அப்பகுதி பொதுமக்களுக்கு மாற்றும் இடம் வழங்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மொத்தம் 5 தளங்கள் உள்ளன. இங்கு, கல்வி, வேலைவாய்ப்பு, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்படுகிறது. இந்த துறைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், தினமும் பல்வேறு தேவைகளுக்காக 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வந்து பயனடைந்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் இரு புறமும் வளாகத்தின் இருபுறமும் அமர்ந்து ஓய்வு எடுப்பது வழக்கம்.
 
 இந்நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தின் கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் குட்டை போல் தேங்கி வருகிறது. இதனால், கலெக்டர் அலுவலகத்தை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அங்கு கொசு உற்பத்தியால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. மேலும், இப்பகுதியில் பன்றிகள் நடமாட்டமும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்தை பாதுகாக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : office ,Collector ,
× RELATED துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறையால் காளையார்கோவிலில் சுகாதாரக்கேடு