×

அரசு ஊழியர் கொலையில் 5 பேர் கைது முத்தியால்பேட்டை காவல் நிலையத்தை சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் ஆய்வு

புதுச்சேரி:  புதுவை அரசு ஊழியர் கொலையில் 5 பேரை முத்தியால்பேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனிடையே கொலை நடந்த பகுதியான முத்தியால்பேட்டை காவல் நிலையத்தை அதிரடியாக ஆய்வு செய்த சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். புதுச்சேரி, குருசுகுப்பம், மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (50). பொதுப்பணித்துறை ஊழியரான இவர் 8ம்தேதி அதிகாலை அங்குள்ள கோயில் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக லோகநாதன் கொலை செய்யப்பட்டுஇருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியனின் தாய் மல்லிகா, அக்காள் பிரபா, மகன் கோகுல் மற்றும் கூட்டாளிகளான சதீஷ், அருண்பாண்டி, மணிகண்டன், ராஜேஷ், ஞானவேல், ஞானசேகரன் உள்ளிட்ட 10 பேர் கும்பல் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடினர்.

இதனிடையே லோகநாதன் கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் நேற்று எஸ்வி படேல்- ஆம்பூர் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பெரியகடை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். இந்நிலையில் கோகுல், அருண்பாண்டி, சதீஷ், குணா, வாசு உள்ளிட்ட 5 பேரை நேற்று தமிழக எல்லை பகுதியில் அதிரடியாக கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் பாண்டியன் கொலை குற்றவாளிகளுக்கு உதவி செய்ததற்கு பழிக்குப் பழியாக லோகநாதனை தீர்த்துக் கட்டியதாக போலீசில் அளித்த வாக்குமூலத்தில் அவர்கள் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருக்கும் பாண்டியனின் தாய், அக்காள் உள்ளிட்ட மேலும் சிலரை தனிப்படை தொடர்ந்து வலைவீசி தேடி வருகிறது. இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்ட லோகநாதனின் உடல் வைத்திக்குப்பம் கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலையே இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் லோகநாதன் கொலை நடந்த பகுதியான முத்தியால்பேட்டை காவல் நிலையத்தை சட்டம்- ஒழுங்கு சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் நேற்று அதிரடியாக ஆய்வு செய்தார். 3 மணி நேரம் அங்கு முகாமிட்ட அவர், நிலுவை வழக்குகள், ரவுடிகள் கண்காணிப்பு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு அதிகாரிகளை கண்டித்ததாக தெரிகிறது. மேலும் அரசு ஊழியர் லோகநாதன் கொலையில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கை விவரத்தை கேட்டறிந்த சீனியர் எஸ்பி, அனைத்து குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சீனியர் எஸ்பியின் அதிரடி ஆய்வு காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Rahul Alwal ,police station ,Muthialpet ,
× RELATED துரைப்பாக்கம் காவல் நிலையத்தில்...