மின்துறை அலுவலகத்தில் அதிரடி ஆய்வு வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியது ஏன்?

புதுச்சேரி:  புதுச்சேரி மின்துறை அலுவலகத்தில் ஆய்வு செய்த சட்டமன்ற குழுக்கள் சீன ஸ்மார்ட் மீட்டர் வாங்கியதற்கு யார் காரணம் என அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பினர். புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினர்.  இதில் சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் சிவா எம்எல்ஏ மற்றும் உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் அசனா, தனவேலு, விஜயவேணி, வெங்கடேசன், சங்கர், மின்துறை செயலர் தேவேஷ் சிங், சட்டசபை செயலர் வின்சென்ட்ராயர், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் பேசும்போது, அரசு துறைகளில் திட்டங்கள் சிறப்பாக செயல்படவும், முறைகேடுகள் மற்றும் வீண் செலவுகள், விரயங்களை தடுக்கும் எண்ணத்தில் இக்குழுக்களை நியமிக்க வழிவகை செய்துள்ளது. அதன்படி, ஏற்கனவே கமிட்டி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தும் அதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் 4 லட்சத்திற்கும் மேல் மின்இணைப்புகள் உள்ளன. ஆனால், தேவையற்ற 34 ஆயிரம் சீன ஸ்மார்ட் மீட்டர்களை ரூ.42 கோடி செலவில் வெளிநாட்டில் இருந்து வாங்கி வீடுகளுக்கு பொருத்தி இருக்கிறீர்கள். இதற்கு யார் அனுமதி கொடுத்தது? சாதாரண டிஜிட்டல் மீட்டர் ரூ.1400க்கு கிடைக்கும் நிலையில், சீன ஸ்மார்ட் மீட்டரை ரூ.13 ஆயிரத்துக்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன?

நகரப்பகுதி முழுவதும் தரமான மின்கேபிள் புதைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்கட்டணம் செலுத்தாதபோது மாதத்திற்கு 2.5 சதவீதம் என ஆண்டுக்கு 30 சதவீதம் அபராத வட்டி வசூல் செய்வது சட்ட விரோதம். கூடுதல் கட்டணம், அபராத கட்டணம் என்பது உள்ளிட்ட 4 தலைப்புகளில் மின்நுகர்வோரிடம் இருந்து பணம் வசூல் செய்வது தவறானது. ஹைமாஸ் விளக்குகளில் 90 சதவீதத்திற்கும் மேல் எரிவதில்லை. அதன் பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்தது ஏன்? தெருவிளக்குகளில் 30 சதவீதத்திற்கும் மேல் எரியவில்லை. போதிய மின்சாதனங்களும் இல்லை. மின் இழப்பையும், திருட்டையும் தடுக்கவில்லை. தலைமை மின்துறை அலுவலகத்தில் ரூ.3 கோடிக்கு மேல் பயனற்ற பழைய மின்மாற்றிகள் குப்பை போல் கிடக்கிறது. அதனை ஏன் டெண்டர் மூலம் ஏலம் விடவில்லை? பூமிக்கடியில் செல்லும் மின்கேபிள் எரிந்தால் ரூ.8 ஆயிரமும், கம்பத்தில் ஏதேனும் பாதிப்பு உண்டாகி மின்தடை ஏற்பட்டால் ரூ.2 ஆயிரமும் வசூல் செய்கிறீர்கள். நுகர்வோரிடம் சேவை கட்டணம் வசூல் செய்யும்போது ஏன் பழுது பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பொது கணக்கு குழு தலைவர் சிவா பேசுகையில், ஏற்கனவே கமிட்டி கூடி எடுத்த முடிவுகளுக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என இங்கு விளக்கம் தர வேண்டும். தேவையற்ற சீன ஸ்மார்ட் மீட்டர் பொருத்த யார் காரணம்? மக்கள் எங்களிடம் தான் கேட்கிறார்கள். நாங்கள் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் விளக்கு எரியாவிட்டாலும், செல்போனுக்கு சார்ஜ் போட்டாலும் ஓடுகிறது. இதை கமர்சியல் நுகர்வோருக்கு முதலில் பொருத்தாமல், இதுவரை இலவசமாக மின் இணைப்பு பெற்று இருந்த குடிசைப்பகுதி மக்களுக்கு பொருத்துகிறீர்கள். கண்டாக்டர் தோட்டம், குமரகுருபள்ளம், திப்புராயப்பேட்டை உள்ளிட்ட குடிசைவாழ் மக்கள் அதிகமுள்ள வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சீன ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி இருக்கிறீர்கள். நேரு வீதியில் 30 சதவீதம் கடைகளில் மின்மீட்டர் ஓடவில்லை எனக்கூறி, அவர்களுக்கு சராசரி பில் போடுகிறீர்கள். மின்மீட்டர்கள் ஓடவில்லை என கூறும் கடைகளின் பட்டியல் வேண்டும்.

ஒரு காலத்தில், தமிழ்நாட்டில் மின்கட்டணம் அதிகமாக இருந்தது. புதுச்சேரியில் குறைவாக இருந்தது. தற்போது புதுச்சேரியில் தான் அதிகமாக இருக்கிறது. ரூ.10 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தியவர்கள், ரூ.15 ஆயிரம் செலுத்தும் நிலையுள்ளது. ஆகையால் நீங்கள் வசூலிக்கும் மின்கட்டண விகித பட்டியலை இங்கு தர வேண்டும். தெருவிளக்குகள் பழுதானால் அந்த பகுதியின் இளநிலை பொறியாளரிடம் தெரிவித்தாலே அதை சரி செய்ய வேண்டும். ஆனால் கண்காணிப்பு பொறியாளர் வந்து பார்த்த பிறகு தான் சரி செய்கின்றனர். புதிதாக போடும் ரோட்டில் மின்துறையினர் குழி தோண்டுகிறார்கள். ஆனால் அதனை சரியாக மூடுவது இல்லை. இன்னும் பல இடங்களில் எல்இடி விளக்குகள் பொருத்தப்படவில்லை என்றார்.

Tags : Action Study Homes ,Home Office ,
× RELATED தெலுங்கு தேசத்தை சேர்ந்த மாஜி மத்திய...