×

கால்வாய்களை தூர்வாராததால் கலெக்டர் நிகழ்ச்சியை புறக்கணித்த விவசாயிகள்

உத்தமபாளையம், டிச.10: ராயப்பன்பட்டி சண்முகாநதி அணை தண்ணீர் திறந்தால் செல்லக்கூடிய 18 கி.மீ கால்வாய் பெயரளவில் தூர்வாரப்பட்டதால் கலெக்டர் கலந்து கொண்ட விழாவை விவசாயிகள் புறக்கணித்தனர். ராயப்பன்பட்டி சண்முகாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராயப்பன்பட்டியில் இருந்து சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சின்னஓவுலாபுரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், இங்குள்ள 600க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காய்கறிகள், வாழை, திராட்சை, உள்ளிட்ட விவசாயத்தின் பரப்பு அதிகரிக்கும். மேலும், மறைமுகமாக 3 கண்மாய்கள் வரை தண்ணீர் தேக்கிட வாய்ப்புகள் உருவாகும்.

ஆனால், சண்முகாநதி அணை திறப்பதற்கு முன்பே பொதுப்பணித்துறை வடிநிலகோட்ட அதிகாரிகள் இதன் கட்டுப்பாட்டில் செல்லும் சுமார் 18 கி.மீ தூரம் கால்வாய்களை தூர்வாருவது வழக்கம். காரணம் இந்த கால்வாய்களில் அதிகமான அளவில் முள்புதர்கள், தோட்டங்களில் இருந்து கிடைக்கக்கூடிய தென்னை மட்டைகள், விறகுகள் போன்றவை அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். இதனைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரினால் தான் சண்முகாநதி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதியாக உள்ள ஓடைப்பட்டி வரை செல்லும். நேற்று தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் தண்ணீரை திறந்து வைத்தார்.

அவர் வருகைக்கு முன்பே ரோட்டோரங்களில் உள்ள கால்வாய்களின் முள்புதர்களை மட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர். ஆனால், முழுமையாக 18 கி.மீ தூரத்திலும் விளைந்து இடையூறாக உள்ள முள்புதர்கள் அகற்றப்படவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். தண்ணீர் திறக்கப்படும்போது சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓடைப்பட்டி, கன்னிசேர்வைபட்டி உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இவர்கள் யாரும் வரவில்லை. அதே நேரத்தில் ராய்ப்பன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...