×

குண்டும், குழியுமாக மாறிய ரயில்வே ஸ்டேஷன் சாலை

தர்மபுரி, டிச.10: தர்மபுரியில் குண்டும், குழியுமாக மாறிய ரயில்வே ஸ்டேஷன் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தர்மபுரி அரசு மருத்துவமனை சந்திப்பு சாலையில் இருந்து, தர்மபுரி ரயில் நிலையம் வரை அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு, ரயில்வேக்கு சொந்தமான தார் சாலை உள்ளது. டீச்சர்ஸ் காலனி, இந்திராநகர், வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வெண்ணாம்பட்டி, ஏஆர் குடியிருப்பு, குள்ளனூர், மாந்தோப்பு, நெல்லிநகர், நியூகாலனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் தினசரி ஆயிரகணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. வெளிமாநிலத்தில் இருந்து மாதத்தில் 3 முறை ரயிலில் வந்திறங்கும் அரிசி, கோதுமை, சிமெண்ட், லாரிகள் மூலம் இந்த சாலையின் வழியாக குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.  இவ்வாறு ஏற்றிச்செல்லும் லாரிகளால், சாலைகள் குறுகிய காலத்தில் சேதம் அடைகிறது. சாலை அமைத்து சில ஆண்டிலேயே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ரயில்வே துறை, நெடுஞ்சாலை துறை, இலக்கியம்பட்டி ஊராட்சி நிர்வாகம் இணைந்து, தரமான தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Railway Station Road ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை: மனைவி கோபித்து சென்றதால் விரக்தி