×

நஞ்சுண்டாபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி தீவிரம்

கோவை, டிச. 10:  கோவை, நஞ்சுண்டாபுரத்தில் மாநகராட்சி சார்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை உக்கடம், ஒண்டிப்புதுார், நஞ்சுண்டாபுரத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதில், உக்கடத்தில் கட்டுமான பணி முடிவடைந்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டில் உள்ளது. ஒண்டிப்புதுாரில் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது, ஆனால் திருச்சி சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையாதலால் ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக இன்னமும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனிடையே நஞ்சுண்டாபுரத்தில் 2010ம் ஆண்டு கட்டுமான பணி மேற்கொண்டபோது, அப்பகுதி மக்கள், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் காரணமாக, அப்பணி 2011ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பை 2017ம் ஆண்டு வழங்கினார்.

இதையடுத்து, கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தை, தொடர்ந்து கட்டுவதற்கு கோவை மாநகராட்சி சார்பாக மீண்டும் டெண்டர் விடப்பட்டது.  இதில் சென்னையை சேர்ந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் ரூ.43 கோடி செலவில் நஞ்சுண்டாபுரத்தில் மீண்டும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. தற்போது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இம்மாதம் இறுதிக்குள் பணியை விரைந்து முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன,’’ என்றார்.

Tags : sewage treatment plant ,
× RELATED  பராமரிப்பு பணியால் இன்று கொளத்தூர்...