×

‘யு டியூப்’ தகவல் மூலம் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடித்த இன்ஜினியர்: ரோந்து போலீசில் சிக்கினார்

ஆவடி: ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, தனியார் கல்லூரி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு வாலிபர் புகுந்து இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மூலம், கொள்ளை முயற்சி குறித்து வங்கியின் தலைமை அலுவலகமான பெங்களூருவில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, வங்கியின் அதிகாரிகள் உடனடியாக முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பின்னர், இரவு ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், ராமச்சந்திரன் ஆகியோர்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, ஏடிஎம் மையத்தை ஒரு மர்மநபர் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் கொள்ளையன் தப்பி செல்லாமல் இருக்க ஏடிஎம் மையத்தின் ஷட்டரை இழுத்து மூடினர். பிறகு, பட்டாபிராம் சரக காவல் நிலைய பகுதியில் நள்ளிரவு ரோந்து பணியில் இருந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர்.

  அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.  போலீசார் அனைவரும் சேர்ந்து ஏடிஎம் மையத்தின் ஷட்டரை திறந்து கொள்ளையனை சுற்றிவளைத்து பிடித்து, முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், பிடிபட்ட நபர் திருநின்றவூர் அருகே பாக்கம் வெங்கடேசபுரத்தை சார்ந்த உதயசூரியன் (32) என்பதும், டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து விட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் பொறியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், முத்தாபுதுப்பேட்டை அருகே காவனூர் பகுதியில் உள்ள “இந்தியா ஒன்” என்ற ஏடிஎம் மையத்தை உடைத்து  ரூ.4 லட்சத்தை கொள்ளை அடித்ததையும், திருநின்றவூர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். கொள்ளையடித்த பணம் அனைத்தையும் செலவு செய்து விட்டதாகவும் உதயசூரியன் கூறியுள்ளார்.  “யு டியூப்” மூலமாக ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளையடிப்பதை தெரிந்து கொண்டு, அதன்படி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.  இவர் கொள்ளையடிக்கும் முன்பு ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடித்து மறைத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயசூரியனை கைது செய்து மேலும் விசாரிக்கின்றனர்.

Tags : Engineer ,
× RELATED தலைவாசல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி