×

செய்யாறில் விவசாயிகளின் பரிதாப நிலை தொடர் மழையால் பாதிப்புக்குள்ளான 300 ஏக்கர் நெற்பயிர் இழப்பீடு வழங்க கோரிக்கை

செய்யாறு, டிச.4: செய்யாறு பகுதிகளில் தொடர் மழையால் 300 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. எனவே, வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வாழ்குடை, முக்கூர், மதுரை, பாராசூர் உள்ளிட்ட கிராமங்களில் முன் சம்பா பருவத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் என்.எல்.ஆர், ஏ.டி.டி 51 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர்.இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில் செய்யாறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதில், தண்டு உறுதித்தன்மை இல்லாததால் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள், ஒன்றன்மீது ஒன்று பாய் விரித்தார்போல சாய்ந்து போனது. மேலும், அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்ததால், நீரில் மூழ்கி மண்ணில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைத்து நாற்றுகளாக மாற தொடங்கிவிட்டன.ஏக்கருக்கு ₹30 ஆயிரம் வரை செலவழித்து நடவு செய்து, அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, முளைத்து போனது விவசாயிகளை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது.விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கர் நெல்பயிருக்கு ₹450 பிரீமியம் தொகையை வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்தி உள்ளனர். எனவே, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையில் உள்ள விவசாயிகள், தங்களுக்கு பயிர் காப்பீடாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், கோரிக்கை வைத்து பல நாட்கள் ஆகியும், வேளாண் அதிகாரிகளோ பயிர் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்ய வரவில்லையாம்.

நெற்கதிர்கள் முற்றிய நிலையில் மண்ணில் சாய்ந்து மழைநீரில் மூழ்கி நாற்றுகளானதை கண்டு கண்ணீர் விடும் விவசாயிகள், மிஞ்சியிருக்கும் 40 சதவீத நெல்மணிகளையாவது சேமிக்க வேண்டி சேற்றில் இறங்கி அறுவடை செய்து வருகின்றனர்.அதேபோல், பின் சம்பாவில் பயிரிட்டிருந்த நெற்பயிர்களும், பால்பிடிக்கும் தருவாயில் தண்டு உடைந்து சாய்ந்து போனது. நெல்மணிகளில் 80 சதவீதம் பால்பிடிக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களை பார்வையிட்டு, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய...