×

வாலாஜா அருகே தலைமையாசிரியர் இடமாற்றம் கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் தர்ணா

வாலாஜா, நவ.22: வாலாஜா அருகே தலைமையாசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த கல்வி அதிகாரிகள் மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 100 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளி தலைமையாசிரியராக கடந்த 12 ஆண்டுகளாக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சரவணன் சோளிங்கர் ஒன்றியத்தில் உள்ள வீரந்தாங்கல் ஊராட்சி பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் மருதாலம் ஊராட்சி பள்ளி தலைமையாசிரியர் மேகலா ஒழுகூர் ஊராட்சி பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால் தலைமையாசிரியர் மேகலா பொறுப்பு ஏற்காமல் நேற்று முதல் விடுமுறையில் சென்று விட்டார்.

இந்நிலையில், இடமாற்றத்திற்கான ஆணையை சோளிங்கர் வட்டார கல்வி அலுவலர் முருகன் மற்றும் ஒழுகூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருஞானசம்பந்தம் ஆகியோர் நேரில் சென்று சரவணனிடம் வழங்கினர். அப்போது, சரவணனுக்கும் கல்வி அதிகாரி முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் தலைமையாசிரியர் இடமாற்றத்தை கண்டித்து பள்ளி முன் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ஒரு சில பெற்றோர்களும் மறியலில் கலந்து கொண்டனர். தகவலறிந்த வாலாஜா இன்ஸ்பெக்டர் பாலு, ராணிப்பேட்ைட மாவட்ட கல்வி அலுவலர் அருள்ராஜ், சோளிங்கர் வட்டார கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாணவர்கள், பெற்றோர்கள், ஏன் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்தீர்கள் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளிக்கு சென்று அங்கிருந்த சரவணனிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசாணையை நீங்கள் மதிக்க வேண்டும். உங்களுக்கு ஏதாவது கோரிக்கை இருந்தால் அதை மனுவாக கொடுங்கள் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறினர்.
பின்னர், போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் தலைமையாசிரியர் இடமாற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாலாஜா அடுத்த ஒழுகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

Tags : Walaja ,
× RELATED இந்துக்களுக்கு விரோதமான கட்சிதான் பாஜ: திருமாவளவன் பேட்டி