×

ஆக்கிரமிப்பின் பிடியில் மன்னாதீஸ்வரர் கோயில் குளம்

பாகூர். நவ. 20: பாகூர் கொம்யூன்  கன்னியக்கோயில் கிராமத்தில் பழமைவாய்ந்த மன்னாதீஸ்வரர் கோயில் உள்ளது.  இக்கோயிலுக்கு கடலூர், விழுப்புரம்,  புதுச்சேரியில் இருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  இக்கோயிலுக்கு சொந்தமான குளக்கரை மற்றும் நிலத்தை  ஆக்கிரமித்து சிலர் வீடுகள், கடைகள் கட்டிக்கொண்டு கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.  இதனால் பக்தர்கள் நீராடி சாமி தரிசனம் செய்யவும், திருவிழா காலங்களில் தெப்ப உற்சவம் நடத்த போதிய வசதி இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் இந்த தீர்த்த குளத்தில் கழிவுநீர் விட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் குளத்தில் நீராட முடியாமல் தவித்து வருகின்றனர்.   ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மாற்று இடமாக அரசு மனைபட்டா  வழங்கியிருக்கிறது. இதனை பெற்றுக் கொண்டும், இடத்தை காலி செய்யாமல் உள்ளனர்.

எனவே இந்த இடத்தை கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு குளத்தை மீட்டு பக்தர்களுக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் குழந்தைகள் விளையாட்டு பூங்கா,  குளத்தை தூர்வாரி படித்துறை அமைத்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என கோவில் அறங்காவலர் குழுவினர் புகார் தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில்  கலெக்டர் அருண் நேரில் வந்து ஆய்வு செய்தார். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது தாசில்தார் குமரன், வருவாய் ஆய்வாளர் முருகையன், அறங்காவலர் குழு தலைவர் தனசேகரன், செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Manadheeswarar Temple ,pond ,
× RELATED ஒன்றரை கோடி மதிப்பீட்டில் நல்லதண்ணீர் குளம் சீரமைப்பு