×

பெண் குழந்தை எனது பெருமை என்ற மனநிலையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் விழிப்புணர்வு பயிற்சி முகாமில் அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தல்

அரியலூர், நவ.20: பெண் குழந்தை எனது பெருமை என்ற மனநிலையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என பணியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாமில் அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தினார்.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பணியாளர்களான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை கலெக்டர் ரத்னா துவக்கி வைத்து பேசுகையில்,அரியலூர் மாவட்டத்தில் குறைந்து காணப்படும் பெண் குழந்தை விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும், கிராம அளவில் மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சுகாதாரம், கல்வித்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் பணியாளர்கள் பயிற்சியாளர்களாக தேர்வு செய்து, நேற்று துவங்கி 2 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியாளர்கள் அனைவரும் கிராம, கிராமமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, கர்ப்பிணி பெண்களை ஆரம்பகாலம் முதல் பரிசோதனை செய்து வருவதற்கும், அவர்களுக்கு கருகலைப்பு முற்றிலுமாக தடுத்திடும் வகையில் அறிவுரை வழங்கி கண்காணித்து வருவதற்கும், மேலும் ஸ்கேன் மையங்களை கண்காணிக்கவும் செய்வார்கள். கிராமங்களில் இப்பயிற்சியாளர்களைக் கொண்டு பெண் குழந்தைகள் விகிதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். பெண் குழந்தை எனது பெருமை என்ற மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட பயிற்சி பெற்றவர்கள் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
பயிற்சியில் கருவில் வளரும் சிசுவின்பாலினத்தை எக்காரணம் கொண்டும் கண்டறியவோ, கருக்கொலை செய்யவோ முயல மாட்டேன் என்ற விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் பணியாளர்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.பயிற்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஹேம்சந்த்காந்தி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலகு அலுவலர் செல்வகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாவித்திரி, கண்காணிப்பாளர் சேகர் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : girl child ,
× RELATED பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு