×

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 30ம் தேதி வரை அவகாசம்

தர்மபுரி, நவ.20: வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இம்மாதம் 30ம் தேதி வரை கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பங்களிப்புடன் தவறில்லாத வாக்காளர் பட்டியலாக தயாரிக்கும் முயற்சியில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களின் விவரங்களை தாங்களே வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளவும், பிழைகள் ஏதுமிருப்பின் அதனைத் திருத்தம் செய்து கொள்ளவும், கருப்பு, வெள்ளை நிறத்திலுள்ள தங்களின் புகைப்படத்தை வண்ணப் புகைப்படமாக மாற்றிக் கொள்ளவும், தனது பெயர் பல இடங்களில் இடம் பெற்றிருந்தால் அதனை நீக்கம் செய்யவும், குடும்பத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏதுவாகவும் திருத்தம் செய்துகொள்ளும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் திருத்தம், இந்த மாதம் 30.11.2019 வரை நீட்டித்து கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய திருத்தங்களை மேற்கொள்ள www.nvsp.in என்ற இணைதளத்தில், இயங்கலை (ஆன்லைன்) மற்றும் வாக்காளர்கள் தாங்களாகவே கைப்பேசியில் ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப்யை பதிவிறக்கம் செய்து, அதில் தமது வாக்காளர் விவரங்கள் குறித்து சரிபார்ப்பு செய்து அதில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் உரிய பதிவுகள் செய்து திருத்தங்கள் மேற்கொள்ள, தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர் அட்டையில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள இருப்பின், கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை, உழவர் அடையாள அட்டை, என்.பி.ஆர். ஸ்மார்ட் அட்டை, அரசு, அரசு சார் பொதுத்துறை நிறுவனங்களின் அடையாள அட்டை, சமீபத்திய குடிநீர், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு ரசீது ஆகிய சான்றாவணங்களின் ஒன்றினை பதிவேற்றி திருத்தம் செய்து கொள்ளலாம். வாக்காளராகிய நாம் வாக்காளர் அட்டை மற்றும் வாக்காளர் பட்டியலில், தமது மற்றும் தம்முடைய குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள, 18.11.2019 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது மேற்குறிப்பிட்ட கால அவகாசமானது 30.11.2019 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு ஆரோக்கியமான வாக்காளர் பட்டியல் உருவாக்க ஒத்துழைப்பு தர வண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை...