×

அரியலூரில் நடந்த அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவில் 907 பேருக்கு ரூ.3.19 கோடி நல உதவி

அரியலூர், நவ. 19: அரியலூரில் நடந்த அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவில் 907 பேருக்கு ரூ.3.19 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. அரியலூரில் கூட்டுறவுத்துறை சார்பில் 66வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழா நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு கொடியை திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன் ஏற்றி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கர்ணன் கூட்டுறவு உறுதிமொழியை வாசித்தார். கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசு, கூட்டுறவு சங்கங்கள் பற்றி பள்ளி அளவில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் ஒருவருக்கு ரூ.3.91 லட்சம் மதிப்பில் டிராக்டர், 2 பேருக்கு ரூ.8.70 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைப்பதற்கான ஆணை, 829 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2 கோடியே 39 லட்சத்து 70,500 மதிப்பில் கடனுதவிக்கான காசோலை, 75 பேருக்கு ரூ.67.50 லட்சம் மதிப்பில் மத்திய கால கடனுதவி காசோலை என மொத்தம் 907 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 19 லட்சத்து 81,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன் வழங்கினார்.

மேலும் அமைக்கப்பட்டிருந்த நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவை, ஆவின் உற்பத்தி பொருட்கள், கூட்டுறவு பண்டக சாலை பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டு அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் 66வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 18.11.2019 இன்றைய தினம் கூட்டுறவுகள் வாயிலாக அரசின் முயற்சிகள் என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட 250 கூட்டுறவு நிறுவனங்களும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 9 கிளைகளும் செயல்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் 2011 முதல் 683 நபர்களுக்கு ரூ.4.15 கோடி வறட்சி நிவாரணமும், 23,317 நபர்களுக்கு ரூ. 90.62 கோடி பயிர்கடன் தள்ளுபடியும் 11,712 நபர்களுக்கு ரூ.8.88 கோடி இழப்பீட்டுக்கான பயிர் காப்பீடு தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 1,54,299 நபர்களுக்கு ரூ.821.74 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. 1,348 நபர்களுக்கு ரூ.23.62 கோடி தானிய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. 66 பேருக்கு ரூ.0.88 கோடி சிறுவணிக கடன் வழங்கப்பட்டுள்ளது. 7,577 நபர்களுக்கு ரூ.47.20 கோடி மத்திய காலக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 31 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.72.27 கோடி அளவுக்கு வைப்பு தொகை பெறப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 65 ஊரக கிடங்குகள் புதிதாக கட்டப்பட்டு தானியங்களை வைக்கும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் தான்ய ஈட்டுக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அமைக்க அனுமதித்து தமிழக முதல்வர் ஆணை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையை பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...