5 டன் ரேஷன் அரிசி மினிலாரியுடன் பறிமுதல்

கிருஷ்ணகிரி, நவ.19:  திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை, மினிலாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை தனி தாசில்தார் பிரதாப், வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர், நேற்று கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூர் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தினர். ஆனால், அந்த மினி லாரி நிற்காமல் வேகமாக சென்றது. இயைடுத்து அதிகாரிகள் அந்த லாரியை துரத்திச் சென்று நிறுத்த சொல்லியும் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில், பறக்கும் படையினர் சென்ற வாகனத்தை இடிக்க முயன்றனர். ஆனால், பறக்கும் படையினர் அந்த வாகனத்திற்கு முன்னால் சென்று, தங்களது வாகனத்தை குறுக்கே நிறுத்தினர்.

இதையடுத்து, மினி லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து, லாரியில் உடன் வந்தவரை பறக்கும் படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திருப்பத்தூர் ஆசிரியர் நகரை சேர்ந்த வெங்கடேசன்(48) என்பதும், திருப்பத்தூரில் இருந்து கர்நாடகாவிற்கு 5 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலும், வெங்கடேசன் மற்றும் மினி லாரியை கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிலும் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : ration rice minillary ,
× RELATED உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக 5...