×

காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வில் 871 பெண்கள் பங்கேற்பு

தர்மபுரி, நவ.19: தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில், பெண்களுக்கான 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு நேற்று நடந்தது. இதில் 871 பெண்கள் பங்கேற்றனர். தமிழக காவல்துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் 15 மையங்களில் 3 நாட்கள் தேர்வுகள் நடத்த நிலையில், அயோத்தி நில வழக்கு தீர்ப்பால் தேர்வு பணியில் இருந்த போலீசார், பாதுகாப்பு பணிக்கு செல்ல ேவண்டியிருந்ததால், தேர்வை தள்ளி வைத்தனர். இந்நிலையில், 15மையங்களிலும் நேற்று முதல் மீண்டும் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான உடல்தகுதி, உடல்திறன் தேர்வு தொடங்கியது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டோரில் மொத்தம் 3,748 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் 963 பேர் பெண்கள் தேர்வாகியுள்ளனர். தேர்வான பெண்களுக்கு நேற்று உடற்தகுதி தேர்வு, வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

மேற்கு மண்டல ஐஜியும், தேர்வு மையத்தின் சிறப்பு தணிக்கை அதிகாரியுமான பெரியய்யா தலைமையில் உடற்தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு தேர்வுகுழு உறுப்பினர்களான சென்னை, ஆயுதப்படை (ஏபி) டிஐஜி செந்தில்குமாரி, வேலூர் சிறைத்துறை துணை தலைவர் ஜெயபாரதி, தர்மபுரி மாவட்ட எஸ்பி ராஜன் மற்றும் ஏஎஸ்பி (பயிற்சி), கூடுதல் எஸ்பி மற்றும் பாதுகாப்பு பணியமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் வெற்றி பெற்ற 963 பெண்களில் 82 பேர் உடல்தகுதி தேர்வுக்கு வரவில்லை. இதனால், 871 பெண்கள் மட்டும் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர்.

Tags : women ,
× RELATED அரசின் இருசக்கர வாகனம் பெற தகுதியுடைய மகளிருக்கு அழைப்பு