×

ஊட்டி மருத்துவக்கல்லூரியில் பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை

ஊட்டி, நவ. 14:   ஊட்டி  மருத்துவ கல்லூரியில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என த.மா.கா.  வலியுறுத்தியுள்ளது.  தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர்  யுவராஜ் ஊட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு பல்வேறு  திட்டங்கள் செயல்படுத்தினாலும், அது கிராமப்புறங்களுக்கும், சிறிய  வார்டுகளுக்கும் சென்றடைவதில்லை. எனவே, கட்டாயம் உள்ளாட்சி தேர்தல் நடத்த  வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள்  நடத்த வேண்டும். பள்ளி அரையாண்டு தேர்வு, கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும்  புத்தாண்டு போன்றவைகள் பாதிக்காதவாறு நடத்த வேண்டும். கடந்த பாராளுமன்ற  தேர்தலின்போது பண பலமே தேர்தல் முடிவுகளை நிர்ணயித்தது. அதுபோன்று இன்றி,  நேர்மையாக நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில்  த.மா.கா. போட்டியிடும்.

நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் கட்டுமான பணிகள்  மேற்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை எளிய மற்றும்  நடுத்தர மக்கள் பாதிக்கின்றனர்.  இதில் அவர்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை  மேற்கொண்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். நீலகிரி  மாவட்டத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட  கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கு அனுமதி கொடுத்த  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நீலகிரி சுற்றுலா நகரம் என்பதால், 5 லிட்டர் வாட்டர்  பாட்டில்களுக்கு அனுமதியளித்தது போல், ஒரு லிட்டர் பாட்டிலுக்கும்  அனுமதியளிக்க வேண்டும். ஊட்டியில் மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதியளித்த மத்திய,  மாநில அரசுகளுக்கு நன்றி. அதேசமயம், இந்த மருத்துவ கல்லூரியில்  பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டில்  முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வரும்  கூடலூர் செக்ஷன் 17 நிலப்பிரச்னைக்கு தீர்வு கண்டு, அங்கு வசிக்கும்  மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Aboriginal ,Ooty Medical College ,
× RELATED நெல் கொள்முதல் நிலையத்தில்...