×

முத்துப்பேட்டையில் கிடப்பில் போடப்பட்ட பேட்டை சாலை பணி துவங்கியது

முத்துப்பேட்டை, நவ.14:முத்துப்பேட்டையில் கிடப்பில் போடப்பட்ட பேட்டை சாலை பணி தினகரன் செய்தி எதிரொலியால் மீண்டும் துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பங்களா வாசல் முதல் பேட்டை வரையிலான சுமார் ஒரு கிலோ மீட்டர் சாலை இப்பகுதி மக்களின் முக்கிய சாலை ஆகும். முன்பு தார் சாலையாக இருந்த இந்த சாலை சேதமாகியதால் கடந்த 10ஆண்டுகளுக்கு முன் சிமெண்ட் சாலையாக போடப்பட்டது. சாலை போடும்போது போதிய தரமில்லாமல் முறையாக போடாததால் சாலைப் பணி முடிந்த அடுத்த மாதங்களிலேயே சிமெண்ட் சாலையும் சேதமாகிறது. அதனைத் தொடர்ந்து சேதமான சாலையை பணி எடுத்த ஒப்பந்தக்காரர்கள் திட்ட மதிப்பீட்டில் உள்ளதுபடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் சாலை முழுவதும் முற்றிலும் பள்ளம் பரடுங்குழியாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறி வாகனங்கள் போவதில் சிக்கல் ஏற்பட்டதுடன் மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவில் படு மோசமாக மாறியது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலையை சீரமைக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இதனையடுத்து பேரூராட்சி சார்பில் சென்றாண்டு சுமார் 98 லட்சம் செலவில் மீண்டும் தார் சாலையாக போட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இதில் இந்த சாலை சாலையை அப்பகுதியை சேர்ந்த பலர் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால் பேரூராட்சி நிர்வாகத்தால் அதிரடியாக சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை பணி நடந்து வந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் சுவர் இடிந்து பலியானார். இதனையடுத்து சாலைப்பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதுடன் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தனர். இதுகுறித்து தினகரனில் பலமுறை படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 19ம்தேதி நூதன போராட்டம் நடைபெற இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டி கடந்த 11ம்தேதி தினகரனில் மீண்டும் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜ் பார்வையிட்டு அதிரடியாக சாலை பணியை முழுவீச்சில் துவங்கி முடிக்க ஒப்பந்தக்காரரிடம் உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் சாலை பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags :
× RELATED நாளுக்கு நாள் சாலை சுருங்குவதால்...