×

மேல்செங்கம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் அரசு பள்ளி சமையலறை கட்டிடம்

செங்கம், நவ.12: செங்கம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி சமையலறை கட்டிடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கம் அடுத்த மேல்செங்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்காக பள்ளி அருகே கடந்த 2004-2005ம் ஆண்டில் ₹3 லட்சம் மதிப்பில் சமையலறை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், அதனை சரிவர மராமரிக்காததால் தற்போது இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை அகற்றி விட்டு புதிய சமையலறை கட்டிடம் கட்டித்தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் துறை சார்ந்த அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சிகள் உதிர்ந்து கம்பிகள் வெளியில் தெரிந்தவாறு உள்ளதால் தினசரி சமைக்கும் சமையலர்கள் மிகுந்த அச்சத்துடன் வேலை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி உணவு சமைக்கும்போது மேற்கூரையில் இருந்து மண், இரும்பு  துகள்கள் விழுந்து உணவு  பாழாகும் நிலை உள்ளது. தற்போது, தொடர் மழை காரணமாக சமையலறை கட்டிடத்தில் தண்ணீர்  கசிந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி ஆபத்தான நிலையில் உள்ள சமையலறை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government School Kitchen Building ,Dangerous Paradise ,
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்