×

குடிக்க பணம் தர மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து

வாணியம்பாடி, நவ.12: வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் இர்ஷாத்கான்(48) இவர் சாலையோரம் பொம்மை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷபானா(45) இவர்களுக்கு லுக்ஸர் பானு(23), அஸ்மா, ஆய்ஷா, அம்ரீன், ஆப்ரீன் என்ற 5 பெண் பிள்ளைகள், முஜமில் என்ற ஒரு மகன் உள்ளனர். இர்ஷாத்கானுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால், இர்ஷாத்கான் மது அருந்த பணம் இல்லாத போது தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபடு வாராம். இந்நிலையில்,  நேற்று இர்ஷாத்கானிடம் மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டாராம். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த இர்ஷாத் கான் தன்னிடமிருந்த பேனா கத்தியால் மனைவி ஷபானாவை  குத்தியுள்ளார். இதனை தடுக்க முயன்ற லுக்ஸர் பானுவின் கையில் கத்திப்பட்டு அவரும் காயமடைந்தார். இதனால் லுக்ஸர் பானு அலறி கூச்சலிட்டார். இவரது சத்தம்கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் சிகிச்சைக்காக  வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, வாணியம்பாடி தாலுகா போலீசில் லுக்ஸர் பானு அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி  வழக்குப்பதிந்து இர்ஷாத்கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED தேனியில் மருத்துவரை தொடர்ந்து மனைவியும் கொரோனா தொற்றினால் பலி!!!