×

சேலம் வனக்குழு தலைவர்கள் களக்காடுக்கு அனுப்பி வைப்பு

சேலம், நவ.8: வனத்துறைக்கு பழங்குடியின மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் திட்ட செயல்பாடுகள் பற்றி அறிய சேலம் மலைக்கிராம வனக்குழு தலைவர்களை அதிகாரிகள் களக்காடுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தமிழக வனத்துறையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் எல்லைக்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் பல்வேறு திட்ட செயல்பாடுகள் மற்றும் வனத்துறைக்கு வழங்கும் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது என வனத்துறை கணக்கிட்டுள்ளது. இதனால், அந்த மலைக்கிராம பகுதிகளுக்கு பிற மாவட்டங்களில் உள்ள மலைக்கிராம வனக்குழு தலைவர்களை அழைத்துச் சென்று, கலந்துரையாடல் செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன்படி சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராம வனக்குழு தலைவர்களை களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக மலைக்கிராமங்களுக்கு அனுப்ப சேலம் மாவட்ட வனத்துறை ஏற்பாடு செய்தது.
பழங்குடியினத்தை சேர்ந்த 25 வனக்குழு தலைவர்கள் நேற்று, தனி பஸ் மூலம் களக்காட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வனக்குழு தலைவர்களை உதவி வன பாதுகாவலர் முருகன் அழைத்துச் சென்றார். அவர்களை மாவட்ட வன அலுவலர் பெரியசாமி அனுப்பி வைத்தார். இந்த வனக்குழு தலைவர்கள், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வனக்கிராமங்களுக்கு செல்கின்றனர். அங்கு, வனத்துறைக்கு அங்குள்ள குழுவினர் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்படுகிறது. மேலும், சூழல் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் கிடைக்கும் பலன்கள் பற்றி கலந்துரையாடல் நடக்கவுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Salem Forest Team Leaders ,Kalakkad ,
× RELATED களக்காடு மலையடிவாரத்தில் தொடர்...