×

100 நாள் வேலை முறைகேட்டை கண்டித்து மறியல்

திண்டுக்கல், நவ. 8: ஆத்தூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் (100 நாள் வேலை) நடந்து வருகின்றன. இப்பகுதிகளின் 100 நாள் வேலையில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக புகார் எழுந்தது. குறிப்பாக பாளையங்கோட்டை, போடிகாமன்வாடி, முன்னிலைக்கோட்டை, சித்தரேவு, பிள்ளையார்நத்தம், பித்தளைப்பட்டி, அக்கரைப்பட்டி கிராம ஊராட்சிகளில் முறைகேடுகள் அதிகளவு நடந்தன. இதையடுத்து முன்னாள் மாவட்ட கலெக்டர் கடந்த ஜூன் 16ம் தேதி சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அப்போது சில ஊராட்சிகளில் தனியார் நிறுவனங்கள், தனியார் மில்களில் வேலை பார்த்தவர்கள் பயனாளிகளிலிருந்து நீக்கப்பட்டனர். அதன்பின்பும் ஆத்தூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலையில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வந்தன.

ஊராட்சி செயலாளர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் பெயரிலே பயனாளிகள் அட்டையை போட்டு கொண்டு அவர்கள் பெயரிலே வார, வாரம் பணம் எடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக என்.பஞ்சம்பட்டி ஊராட்சி செயலர் சேசுராஜ் தங்களின் உறவினர்கள், வீட்டில் வேலை பார்க்கம் நபர்கள் பெயரில் போலியா அட்டை போட்டு அவர்களுக்கு வேலை வழங்கி விட்டு, முறையான பயனாளிகளுக்கு வேலை வழங்க மறுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்து என்.பஞ்சம்பட்டியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்

நேற்று திண்டுக்கல்- தேனி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். 100 நாள் வேலையில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலர் சேசுராஜை மாற்ற வேண்டும், முறைகேடுகளுக்கு துணைபோகும் வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கோஷமிட்டவாறு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் சின்னாளபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியனை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையில் இனி 100 நாள் வேலையில் முறையான பணி வழங்கப்படும், போலி பயனாளிகள் நீக்கப்படுவர் என உறுதியளிக்கப்பட்டது. அதன்பிறகே மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Work Scandal ,
× RELATED 3 கி.மீட்டருக்கு 100 ரூபாய் நிர்ணயம்...