×

10 கோடி செலவில் நடந்த புனரமைப்பு பணி முறைகேடு விவகாரம்: புழல் ஏரியில் ஏற்பட்ட விரிசல் சாதாரண வெடிப்புகள் தான்

சென்னை:புழல் ஏரியில் ஏற்பட்ட விரிசல் சாதாரண வெடிப்புகள் தான் என்று தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அளித்த விளக்கம் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர்  தேவையை பூர்த்தி செய்வதில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. இதனால், மதகுகள் ஓட்டிய சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டதால் நீர் கசிவு ஏற்பட்டது. இதை  தொடர்ந்து 10 கோடி செலவில் ஏரிகளின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் 2015ல் நடந்தது. 1.20 கி.மீ தூரத்திற்கு ஏரியின் ஒரு பக்க கரை பலப்படுத்தப்பட்டது. ஆனால், இப்பணிகளை முறையாக மேற்கொள்ளப்படாததால், பல  இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் புழல் ஏரி புனரமைப்பு பணியில் முறைகேடு என கடந்த 12ம் ேததி செய்தி வெளியானது.

இது தொடர்பாக அரசுக்கு பொதுப்பணித்துறை அளித்திருக்கும் விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  விளக்கத்தில் கூறியிருப்பதாவது: 10.56 கோடி செலவில் எல்எஸ்.300 மீட்டரில் இருந்து எல்எஸ்.1700 மீட்டர் வரை  உள்ள புழல் ஏரி கரையை அகலப்படுத்தும் மற்றும் பலப்படுத்தும் பணி, 2ம் எண் கலங்கல் பலப்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டது. 2ம்எண் கலங்கல் பலப்படுத்தும் பணிகளில் ஏற்கனவே  கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த 1.70 மீட்டர் அகலமும், 4.85 மீட்டர் உயரமும் கொாண்ட கலங்கல் சுவற்றுக்கும்0.90 மீட்டர் அகலமும், 1.20 மீட்டர் உயரமும் கொண்ட சுவற்றிற்கு நடுவில் கான்கீரிட் கொண்டு தண்ணீர்  வழிந்தோடுவதற்காக சாய்வாக இணைக்கப்பட்டு, சுவர் ஒன்று 1.70 மீட்டர் மேல் அகலத்திலும், 6 மீட்டர் கீழ் அகலத்திலும் மற்றும் 4.85 மீட்டர் உயரத்திலும், 1.78 மீட்டர் நீளத்திலும் கட்டி முடிக்கப்பட்டது.

தற்போது கலங்கல் சுவரின் சாய்வு பகுதியில் 2 மில்லி மீட்டர் அகலமும், 10 மில்லி மீட்டர் ஆழமும் கொண்ட சிறிய வெடிப்புகள் ஆங்காங்கே சுமார் 10 இடத்தில் உள்ளது. இது கான்கிரீட் சுருங்குவதால் வரும் சாதாரண  வெடிப்புகள் தான் என்றும், தற்போதைய நீர்மட்டம் கலங்களின் கீழ்மட்டத்தின் கீழாக உள்ளதென்றாலும் நீர் மட்டம் உயரும் பட்சத்தில் இந்த வெடிப்புகளால் நீர் கசிவு எதுவும் இருக்காது என்றும் அவசர நடவடிக்கை எதுவும்  தேவையில்லை என்றும் இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது. எனினும் இந்த வெடிப்புகளை சீரமைப்பதற்கு விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Reconstruction work scandal ,lake , Reconstruction Work Abuse, Boom Lake
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!