×

இடிந்து விழும் ஆபத்தில் அங்கன்வாடி மையம்

காங்கயம்,நவ.8: நத்தக்காடையூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சம் அடைந்துள்ளனர். காங்கயம் ஊராட்சி ஒன்றியம், நத்தக்காடையூர் ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி புரத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசித்து வருகின்றனர். இங்குள்ள அங்கன்வாடி மையத்தில், அதே பகுதியை சேர்ந்த 15 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த அங்கன்வாடி மையம் பழுதடைந்து கட்டிடமும் விரிசல் அடைந்துள்ளது. மேற்கூரை ஓடுகளால் உள்ளது. மழை பெய்யும்போது ஒழுகுகிறது. இதனால் இங்கு படிக்க வரும் குழந்தைகள் நனைந்து காய்ச்சல்,சளி ஏற்படுகிறது. மேலும் அங்கன்வாடி மையத்தில் மின் ஒயர்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப தயங்குகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது : சிவசக்திபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்த கட்டிடமாகும். அது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் மேல் தளம் சிதிலமடைந்துள்ளது. மழைபெய்தால் மழை நீர் வகுப்பறைக்குள் வருகிறது. எனவே புதிய மையம் கட்டித்தர வேண்டும். அதுவரை சிவசக்திபுரத்தில் சுய உதவிக் குழு கட்டிடம் பயன்படுத்தாமல் உள்ளது. அதை அங்கன்வாடி மையமாக செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Anganwadi Center ,
× RELATED பொன்னை அருகே ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி விளையாடும் சிறுவர்கள்