×

அரசு பள்ளி மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், அக். 23: அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு செயல்பாடுகள் செய்து காட்டப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். ஜூனியர் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் காசிராசன் முன்னிலை வகித்தார்.

இதில் பெரியவர்கள் பார்வையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது அருகில் வாலி நிறைய தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும். தீக்காயங்கள் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட்டாசுகளை நின்ற நிலையில் வெடிக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகள் மீது குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்க கூடாது. அரசு நிர்ணயித்த நேரத்திற்கு பிறகு பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என பல முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் செய்து காட்டப்பட்டது.பெரம்பலூர் தீயணைப்புத்துறையின் மூத்த தீயணைப்பாளர் ராமன் மற்றும் தீயணைப்பாளர்கள் கல்யாணவாசன், ராஜ்குமார், தனபால், பால்ராஜ், சரண்சிங் ஆகியோர் விழிப்புணர்வு செயல்பாடுகளை செய்து காட்டினர். முன்னதாக ஆசிரியர் மணிமாறன் வரவேற்றார். ஆசிரியர் சன்னாசி நன்றி கூறினார்.


Tags : Government School Students ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன்...