×

மழைநீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக மாறிய வாரச்சந்தை

காரிமங்கலம், அக்.23: காரிமங்கலம் வாரசந்தையில் பராமரிப்பின்றி உள்ளதால், மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் வியாபாரிகள், வணிகர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச் சந்தை நடந்து வருகிறது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். மேலும் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடு, மாடு, கோழிகள் போன்றவை அதிக அளவில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதிக வருவாய் ஈட்டித் தரும் இச்சந்தை மூலம், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் ஏலம் போகிறது. காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ்வரும் இந்த சந்தை, உரிய பராமரிப்பின்றி உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்துவரும் தொடர் மழையால், சந்தையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.  மேலும் கால்நடைகளை நிற்க வைத்து வியாபாரம் செய்யும் பகுதிகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிட்டதால், கால்நடைகளை விற்க முடியாமல் விவசாயிகள் வீட்டிற்கு அழைத்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சந்தையை சீரமைக்க விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, சந்தையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அந்தியூரில் வாரச்சந்தைக்கு தடை