×

பொது மக்களின் குடும்ப விவரங்களை சேகரிக்கும் பணி துவக்கம்

திருப்பூர், அக். 23: திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் விவரங்களை சேகரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி, தாராபுரம், குடிமங்கலம், காங்கயம், குண்டடம், மடத்துக்குளம், மூலனூர், பல்லடம், பொங்கலூர், திருப்பூர் ஊரகம், திருப்பூர் நகரம், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளக்கோவில் உள்ளிட்ட 14 வட்டாரங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் விவரங்களை சேகரித்து செல்போன் செயலியில் பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளது. மேற்படி இச்செயலியில் குடும்ப விவரம், தினசரி உணவளித்தல், வீடுகளை பார்வையிட்டு திட்டமிடல், வளர்ச்சிக் கண்காணிப்பு, வீட்டுக்கு கொண்டு செல்லும் இணை உணவு, குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசி விவரம், அங்கன்வாடி மைய மேலாண்மை, வளரிளம் பெண்கள், கர்ப்பகால பராமரிப்பு குறித்த கணக்கெடுப்பு, பாலூட்டும் தாய்மார்கள் ஆகியவை குறித்த 10 வகையான கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதில் முதல் கட்டமாக, குடும்ப விவரம் மற்றும் ஆதார் எண் குறித்த விவரங்களை சேகரிப்பதற்கான அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன்படி கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு வந்த மேற்கண்ட விவரங்கள் அணைத்தும் செல்போனில் உள்ள செயலியின் மூலமாகவே பதிவு செய்யப்பட உள்ளன. எனவே, இப்பணிகள் தொடர்பான விவரங்களை சேகரிக்க வீடுகளுக்கு வரும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...