×

மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்க 24 குழுக்கள்

ஈரோடு, அக். 23:ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப்புழுக்களை ஒழிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்களை ஒழிக்க மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீடு, வீடாக சென்று கொசுப்புழுக்கள் உள்ளதா, மழைநீர் தேங்கியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த ஒருவாரமாக, கலெக்டர் கதிரவன், ஆணையாளர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில், டெங்கு கொசுப்புழுவை ஒழிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆய்விற்காக வரும்போது பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் லார்வா புழுக்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, தற்போது ஒரு மண்டலத்திற்கு 6 குழு வீதம் 4 மண்டலத்திற்கு 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழுவினர், கல்லூரி மாணவ, மாணவியர் என 800 பேர் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் வீடு, வீடாக சென்று தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து உடனடியாக அப்புறப்படுத்தி அங்கு பிளிச்சிங் பவுடர் போட்டு வருகின்றனர். பிரிட்ஜ், பயன்படுத்தாத கழிப்பறைகள், பூந்தொட்டிகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்கள் மழைக்காலங்களில் அதிகமாக வரும். அதற்காக தான் தற்போது ஆய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பல இடங்களில் ஆய்விற்கு செல்லும்போது வீட்டிற்குள் விட மறுக்கின்றனர். இது தவறான போக்காகும். இந்த பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமும்பட தேவையில்லை. டெங்கு கொசுப்புழு ஒழிப்பில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : groups ,areas ,
× RELATED வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை