×

5 தாலுகாவில் பணியாற்றிய 60 விஏஓக்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் அளிப்பு

நாமக்கல்,  அக்.18: நாமக்கல் மாவட்டத்தில், 5 தாலுகாவில் பணியாற்றிய 60  விஏஓக்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.நாமக்கல்  மோகனூர் சாலையில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில், நாமக்கல், ராசிபுரம்,  சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூர் ஆகிய தாலுகாவில் பணியாற்றும் கிராம  நிர்வாக அலுவலர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. ஆர்டிஓ (பொ)  பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் இந்த கலந்தாய்வை நடத்தினார். இதில் சிறிய  கிராமங்களில் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த கிராம நிர்வாக அலுவலர்கள், பெரிய கிராமங்களில் ஓராண்டு பணி முடித்த கிராம நிர்வாக  அலுவலர்களுக்கு, அவர்கள் விரும்பிய கிராமங்களுக்கு சீனியாரிட்டி  அடிப்படையில் இடமாறுதல் அளிக்கப்பட்டது. இதன்படி 60 கிராம நிர்வாக  அலுவலர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.

 நாமக்கல் டவுன் விஏஓ  முருகேசன், வேட்டம்பாடிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த இடத்துக்கு  நல்லாகவுண்டம்பாளையத்தில் பணியாற்றி வரும் பழனிசாமி மாற்றப்பட்டுள்ளார்.  திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகாவில்  பணியாற்றும் விஏஓக்களுக்கு நேற்று இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.  கடந்த ஜூலை மாதம் நடத்த வேண்டிய இடமாறுதல் கலந்தாய்வை, மாவட்ட வருவாய்  அலுவலர் துரை ரவிச்சந்திரன் நடத்த விடாமல் தள்ளி போடுவதாக குற்றம்சாட்டி,  கடந்த வாரம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், மாவட்டம்  முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் எதிரொலியாக, தற்போது நாமக்கல்  வருவாய் கோட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மட்டும்  இடமாறுதல் கலந்தாய்வு நடத்தி  உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
.

Tags : VAOs ,taluks ,
× RELATED தரமான ரேஷன் அரிசி வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்