×

வடகிழக்கு பருவமழை எதிரொலி பாதிப்புகளை 1077 எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்

கிருஷ்ணகிரி, அக்.18:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் பாதிப்புகளை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் பிரபாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இடி, மின்னல் சமயங்களில், பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்னல் தாக்காமல் இருக்க, கட்டிடங்களில் ஒதுங்கி நிற்க வேண்டும். கட்டிடங்கள் இல்லாத பகுதியாக இருந்தால் குகை, அகழி அல்லது பள்ளமான பகுதிகளை தேர்வு செய்து ஒதுங்க வேண்டும். செங்குத்தான மலை முகடுகளில் மின்னல் தாக்குவது  அதிகம். வெட்ட வெளியில் தனித்த மரங்கள் மட்டும் இருக்குமாயின், கைகளால் கால்களை இறுக்க அணைத்து, குனிந்த நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் நீர் நீலைகளில் (படகு, ஓடம்) இருந்தால் அதனை விட்டு வெளியில் வந்துவிட வேண்டும். கால்நடைகளை மரம், மின்கம்பங்கள், இழுவைக் கம்பிகள் போன்றவற்றில்  கட்டக்கூடாது.

மின்னல் ஏற்படும் போது செல்போன்களை உபயோகப்படுத்தக்கூடாது. உயர் மின்னழுத்த தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகே செல்லக்கூடாது. குறைந்த பட்சம் 50 அடி தூரத்தில் இருப்து நல்லது. இரும்பு கைப்பிடி சுவர்களைத் தொடக்கூடாது. மேற்கூறிய பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இடி, மின்னலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. அதற்கான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்- 1077, வாட்ஸ்ஆப் 63697 00230 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tags : public ,Northeast Monsoon ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,096 ஆக உயர்வு