×

உலக உணவு தினவிழாவில் வில்லுப்பாட்டு மூலம் மாணவிகள் விழிப்புணர்வு

தர்மபுரி, அக்.18:  தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த உலக உணவு தினவிழாவில், மாணவிகள் வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உலக உணவு தின விழா நடந்தது. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் புனிதா வரவேற்றார். அனைத்து வணிகர் சங்க செயலாளர் ரவிச்சந்திரன், ரோட்டரி சங்க தலைவர் சின்னசாமி மற்றும் நுகர்வோர் சங்க தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமை வகித்து பேசுகையில், ‘நடப்பாண்டின் கருப்பொருளாக, நமது செயல்கள் நமது எதிர்காலம் என்ற தலைப்பில் உலக உணவு தின விழா கொண்டாடப்படுகிறது. வரும் 2030ம் ஆண்டுக்குள் பசியற்ற சமுதாயத்தை உருவாக்குவதுடன், உணவை வீணாக்காமல் சத்தான செறிவான உணவை உண்ணும் நிலையை ஏற்படுத்துவதாகும். அனைவரும் துரித உணவுகள் மற்றும் ஜங்க் புட், மசாலா பொருட்களை தவிர்க்க வேண்டும்,’ என்றார்.

தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேசுகையில், ‘அதிக அளவு தண்ணீர், தாராளமாக பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்பு மற்றும் தானிய வகைகளையும், மிதமான அளவில் இறைச்சி மற்றும் மீன் வகைகளையும் சாப்பிட வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, 10ம் மாணவிகள் உலக உணவு தினம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து வில்லுப்பாட்டின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியையொட்டி, மாணவிகளிடையே ஓவிய போட்டி நடந்தது. 30க்கும் மேற்பட்ட மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். சிறப்பிடம் பெற்ற அனைவருக்கும், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி, ராஜசேகரன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : World Food Festival ,
× RELATED உலக உணவு திருவிழா