பழநி அருகே டெங்கு தடுப்பு 200க்கும் மேற்பட்ட டயர்கள் பறிமுதல்

பழநி, அக். 18: பழநி அருகே டெங்கு தடுப்பு நடவடிக்கையாக 200க்கும் மேற்பட்ட டயர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பழநி பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்கள் மழைக்கால காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கையாக சிவகிரிப்பட்டி ஊராட்சியில் அதிகாரிகளால் திடீர் சோதனைகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    பழநி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகாப், ண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் சாலையோரங்களில் உள்ள ஒர்க்ஷாப் மற்றும் நான்கு சக்கர வாகன பராமரிப்பு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா?, மழைநீர் தேங்கும் வகையில் பொருட்கள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து கடைகளில் போதிய பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பழைய டயர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மழைகாலம் துவங்கி உள்ளதால் திறந்தவெளியில் மழைநீர் தேங்கும் வகையில் உள்ள பழைய பாத்திரங்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென கடைக்காரர்களிடம் அறிவுறுத்தி சென்றனர்.
Tags : Palani ,
× RELATED முத்துப்பேட்டை பகுதியில் டெங்கு...