×

டெங்கு பீதி நிலவேம்பு கசாயத்திற்கு கிராக்கி

ஊட்டி, அக். 15:தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பீதி மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் நிலவேம்பு கசாயத்தை வாங்கிக் குடிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  கொசுக்களின் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தை உலுக்கி வருகிறது. ஈடிஎஸ்., கொசுக்கள் எனப்படும் பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்கள் மூலமாக பரவும் இந்த டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது. நீலகிரி மாவட்டம் போன்று மலை மாவட்டங்களில் ெடங்கு கொசுக்கள் வர வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறினாலும், வெளி மாவட்டங்களுக்கு சென்று நீலகிரிக்கு திரும்பும் பலருக்கு டெங்கு பாதிப்புகள் உள்ளன. இதனால், நீலகிரி மாவட்ட மக்களையும் டெங்கு பீதி விட்டு வைக்கவில்லை.

சாதாரணமாக காய்ச்சல் போன்ற தொற்று ஏற்பட்டு உயிரையே பறிக்கும் இந்த டெங்கு காய்ச்சல் தற்போது சமவெளிப் பகுதிகளில் அதிகளவு பாதித்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் மக்கள் உஷாராகியுள்ளனர். மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நாள் தோறும் பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரங்களை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு வராமல் தடுக்க சிறந்த மருந்தாக கருதப்படும் நிலவேம்பு கசாயத்திற்கும் மவுசு கூடியுள்ளது. நிலவேம்பு கசாய பொடிகளை வாங்கிச் செல்வதுடன், எங்காவது நிலவேம்பு கசாயம் கொடுத்தாலும் அதனை பொதுமக்கள் வாங்கிக் குடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று ஊட்டியில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. எப்போதும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதை வாங்கி குடிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். டெங்கு பீதியால் தற்போது நாட்டு மருந்துக் கடைகளில் நிலவேம்பு பொடி விற்பனை சூடு பிடித்துள்ளது.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...