×

தோட்டக்கலைத் துறையின் நுண்ணீர் பாசன திட்ட பணிகள் ஆய்வு

அருர், அக்.10: தர்மபுரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், நுண்ணீர் பாசன திட்ட பணிகள் மற்றும் மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும், துணை நீர் மேலாண்மை திட்ட பணிகள் குறித்து, மத்திய அரசின் துணை ஆணையர் ராவ் கள ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை சார்பில், துணை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த படுகிறது. இத்திட்ட பணிகளை ஆய்வு செய்ய, மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் துணை ஆணையர் ராவ், தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். பின்னர், மொரப்பூர் வட்டாரம் நடுப்பட்டி கிராமத்தில், நுண்ணீர்ப் பாசன வயல்களையும் துணை நீர் மேலாண்மை திட்ட வயல்களையும், கள ஆய்வு செய்தார். மானியம் பெற்ற விவசாயிகளுடன், நுண்ணீர் பாசன திட்டத்தின் பயன்கள் குறித்தும், நுண்ணீர் பாசன முகவர்களின் சேவை குறித்தும் கலந்துரையாடினார்.

மொரப்பூர் வட்டாரம், தமிழகத்திலேயே அதிக அளவில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தி வருவதை அறிந்து, தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு பாராட்டுதலை தெரிவித்தார். நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தும் விவசாயிகளுக்கு, மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை சார்பில், துணை நீர் மேலாண்மை அமைப்புகளான மின்மோட்டார், நீர்த்தேக்க தொட்டி, பைப்லைன் போன்றவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வயல்களையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, தோட்டக்கலை இயக்குரக உதவி இயக்குநர் கார்த்திக், மொரப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தீபா, மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமையின் உதவி செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலை அலுவலர் பொன்முத்து, மொரப்பூர் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Inspection ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...