×

சந்தனமரம், செம்மரம் வெட்ட வனத்துறை அனுமதி அவசியம்

ஈரோடு, அக். 10: ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் இனி மாதந்தோறும் முதல் புதன்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு வனக்கோட்டத்தில் ஈரோடு, அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை ஆகிய 5 வனச்சரகத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். அதன்பின், மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளின் குறைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே, வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 4.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொலிவுறும் வகையில் இந்த வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமையும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்டு மகிழ கண்காணிப்பு கோபுரங்கள், டாக்குமென்ட்ரி படம், பறவைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் கைடுகள் நியமிக்கப்பட உள்ளனர்.  இந்த பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் 10 பேரை கைடாக தேர்வு செய்யவுள்ளோம். விவசாயிகள் சந்தனமரம், செம்மரம் நட்டுள்ளதாவும், அதை எவ்வாறு விற்பனை செய்வது என கேள்வி எழுப்பினர்.  சந்தனமரம், செம்மரம் நல்ல வளர்ச்சி அடைந்து விட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வனத்துறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர், வனத்துறை மூலமாக மரங்கள் வெட்டப்பட்டு அதை ஏலம் விட்டு செலவு தொகை போக மீதமுள்ள தொகையை உரிய விவசாயிகளிடம் வழங்குவோம்.  மாவட்டத்தில் மலைவேம்பு அதிகமாக உள்ளது. தற்போது, பழவகைகள் பயிரிட விவசாயிகள் கேட்டுள்ளனர். அதற்கும் வனத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.  இந்த கூட்டத்தில் வனச்சரகர்கள் சென்னம்பட்டி செங்கோட்டையன், பர்கூர் மணிகண்டன் மற்றும் வனத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Forest Department ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...