×

மதுரை ஆவினில் முறைகேடு, ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகாத மாஜி பொதுமேலாளர்

மதுரை, செப். 20: மதுரை ஆவினில் கடந்த 2 ஆண்டுகளில் முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததாக எழுந்த புகார்களையடுத்து, ஆவின் துணை ஆணையர் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் விசாரணை நடத்தினர். இதில், ஆவினில் வெப்ப உலைக்காக சூரிய ஒளி மூலம்  மின்சாரம் தயாரிக்க, மத்திய அரசு நிதி மூலம் சோலார் பேனல் அமைத்ததில் முறைகேடு நடந்ததாகவும், பால் விநியோகத்திற்கு குறிப்பிட்ட  ஓப்பந்தக்காரர்களுக்கு சலுகை காட்டப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்த அறிக்கையை ஆவின்  நிர்வாக இயக்குநர், கமிஷனருக்கு கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்த  லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, ஆவின் உயரதிகாரிகள் பரிந்துரை செய்தனர். லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மாரியப்பன் தலைமையிலான போலீசார், கடந்த 3  நாட்களாக நடத்திய விசாரணையில், சோலார் பேனல் அமைக்கும் பணிக்கு முக்கிய பொறுப்பு வகித்த மேலாளர்  மணிகண்டன் மீது அதிக புகார்கள் இருந்ததால், அவரை சஸ்பெண்ட் செய்ய  லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து,  நிர்வாக இயக்குநர் காமராஜ் உத்தரவிட்டார். நேற்று 3வது நாள்  விசாரணையில் டெண்டர் தொடர்பாக ஆவினில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களிடம்  விசாரணை நடந்தது.  புகார் கூறப்பட்ட காலத்தில் பொதுமேலாளராக இருந்த  ஜெயஸ்ரீயை விசாரணைக்கு வரும்படி லஞ்ச ஓழிப்பு போலீசார், அவருக்கு நோட்டீஸ்  அனுப்பியிருந்தனர். இவர், தற்போது கடலூர் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுக்கும் மாவட்ட வருவாய் அலுவலராக உள்ளார். போலீஸ் விசாரணைக்காக நேற்று மதுரை வந்த ஜெயஸ்ரீ,   மாலையில்  லஞ்ச ஓழிப்பு போலீசார் முன் ஆஜராவதாக தெரிவித்திருந்தார். மாலை 6 மணி முதல் இரவு 7.15 மணி வரை அவர் வருவார் என போலீசார் எதிர்பார்த்து  காத்திருந்தனர். ஆனால், அவர் விசாரணைக்கு வரவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த போலீசார் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றனர். லஞ்ச  ஒழிப்பு போலீசாரின் விசாரணை இன்றும் நடைபெறும் என தெரிகிறது.    

 

Tags : Majhi ,publicist ,
× RELATED மாஜி முதல்வர் குமாரசாமியின் மகன்...