×

துணைதாசில்தார் பதவி உயர்வு கோப்புகளை எடுத்ததாக வருவாய்த்துறை சங்கங்கள் மோதல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

மதுரை, செப். 20:  மதுரை மாவட்ட வருவாய்த்துறையில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கம் (குரூப்-2) என இரு பிரிவுகள் உள்ளன. துணை தாசில்தார், தாசில்தார் பதவி உயர்வு தொடர்பாக இரண்டு சங்கங்கள் இடையே மோதல் உள்ளது. நேரடி நியமன அலுவலர்கள் வருவாய்த்துறையில் உதவியாளராக சேர்ந்து, 5 வருடத்தில், துணைதாசில்தார் பதவி உயர்வு வழங்க அரசாணை உள்ளது.
ஆனால், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், நாங்கள் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து பல ஆண்டு  பணியாற்றுவதால், பணி மூப்பு அடிப்படையில், பதவி உயர்வை தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்கின்றனர். இது தொடர்பான வழக்கில் 1:2 என்ற விகிதத்தில் பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தவிட்டது.

கடந்தாண்டு நேரடி நியமன அலுவலர் 27 பேருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.  இது தொடர்பான 3 கோப்புகள் கலெக்டர் அலுவலகத்தில், பொதுப்பிரிவில், ஏ1 உதவியாளரிடம் இருந்தது. அந்த கோப்பை நேற்று சிலர் எடுத்து சென்று, ஜெராக்ஸ் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.  இதனை கண்காணித்த நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் 3 கோப்புகளை பறித்து வந்து, ஆவணத்தை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, நேற்று மதியம் கலெக்டர் அறையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, ‘கோப்புகளை திருடவில்லை என  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் டிஆர்ஓ அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இரண்டு தரப்பினரும் நேற்று மாலை வரை போராட்டம் நடத்தினர். அப்போது கலெக்டர், டிஆர்ஓ இல்லை. மாலையில் கலெக்டர் வந்தவுடன், அலுவலக கோப்புகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரடி நியமன அலுவலர்கள் சங்க தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் மணிகண்டபிரபு, பொருளாளர் கிஷோர் கோரிக்கை விடுத்தனர். நாங்கள் யாரும் கோப்புகளை எடுத்துச் செல்லவில்லை என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கலெக்டரை சந்தித்து தெரிவித்தனர். அப்போது, பணி மூப்பு அடிப்படையில் எங்கள் சங்கத்தை சேர்ந்த 27 பேருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும்‘ என கோரினர். இரண்டு சங்க நிர்வாகிகளுடன் கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Darna ,office ,Revenue Associations Collision Collector ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் 31ம் தேதி வரை: அரசு ஆபிசுக்கு செல்ல வேண்டாம்