×

கொடிவேரி குடிநீர் திட்ட பணிகளில் தொய்வு அதிகாரிகள் விளக்கத்தை வீடியோவில் பதிவு செய்த அதிமுக எம்எல்ஏ

பெருந்துறை, செப்.20:  கொடிவேரி குடிநீர் திட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட பெருந்துறை எம்எல்ஏ அவர்களது பேச்சை வீடியோவில் பதிவு செய்தார். ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெருந்துறை சட்டமன்ற தொகுதி முழுவதும் பயன்தரும் கொடிவேரி அணை நீரை ஆதாரமாக கொண்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 கிராம ஊராட்சிகள், பெருந்துறை,  கருமாண்டி செல்லிபாளையம், காஞ்சிக்கோயில், நல்லாம்பட்டி, பள்ளபாளையம்,  பெத்தாம்பாளையம், சென்னிமலை ஆகிய பேரூராட்சிகளும், திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகள் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சிகள் பயன்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை தனி நபர் ஒன்றுக்கு ஊரக பகுதிகளில் 25 முதல் 45 லிட்டர் வீதமும் பேரூராட்சி பகுதியில் 60 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கொடிவேரி குடிநீர் திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 55 லிட்டர் வீதமும் பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும்.

கடந்த டிச.2018ல் ரூ.242 கோடி மதிப்பில் திட்டத்திற்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. 18 மாதத்தில் பணி முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டிய நிலையில் 10 மாதம் ஆகியும் 25 சதவீத பணிகளே நடந்துள்ளது. இதனால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சி, ஒன்றிய அதிகாரிகளை அழைத்த பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் இதுவரை நடந்த பணிகள், இனிமேல் நடக்கும் பணிகள், திட்ட விதிமுறை குறித்து கேட்டார். பின்னர், அவர் அதிகாரிகளிடம் பேசுகையில்,`கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் தாமதப்பட காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும். மீதியுள்ள பணிகள் என்னென்ன? எவ்வளவு காலத்திற்குள் முடிப்பீர்கள். இதற்காக பயன்படுத்தும் குழாய்களின் தரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும். இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது.
அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் நோக்கில் சில அதிகாரிகள் இந்த திட்ட பணியை காலம் தாழ்த்தி வருகின்றனர். இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்’ என்றார்.

இதற்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மகாதேவன் பேசியதாவது: கொடிவேரி பகுதியில் கிணறு மற்றும் தலைமை நீரேற்று நிலைய பணிகள் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையில் நீர் சேகரிக்கும் கிணறு கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இத்திட்டத்தில் கட்டப்பட வேண்டிய 31 தரைமட்ட தொட்டிகளில் 24 பணி நடந்து வருகிறது. மேலும், 80 மேல்நிலை தொட்டிகள் இதன்மூலம் கட்டப்படுகிறது. இதில், தற்போது 26 தொட்டிகள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. மொத்தம் 610 கி.மீ. தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணியில் இதுவரை 120 கி.மீ. தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது 35 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மற்ற பணிகள் அனைத்தும் வரும் 2020 ஜூன் 4ம் தேதிக்குள் நிறைவேற்றப்பட்டு சோதனை ஓட்டம் துவங்கப்படும்.

Tags : AIADMK MLA ,chimney officials ,
× RELATED சோழவந்தானில் இருந்து செல்ல...