×

அவசர உதவிக்கு செல்லும்போது நடுவழியில் பழுதாகி நிற்கும் அவலம் மாற்று ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை

தேன்கனிக்கோட்டை, செப்.19: தேன்கனிக்கோட்டை பகுதியில் அவசர உதவிக்கு செல்லும்போது நடுவழியில் ஆம்புலன்ஸ்கள் பழுதாகி நிற்கும் நிலையில், மாற்று ஏற்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மலை குன்றுகள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வாகனத்தை தயார் நிலையில் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு அவரச அழைப்பின்பேரில், 108 ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றது. தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடி அருகே செல்லும்போது ஆக்சில் கட்டாகியதில் முன்பக்க சக்கரம் கழன்று தனியாக ஓடியது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான ஓட்டுனர், சாமர்த்தியமாக செயல்பட்டு சற்று தொலைவில் ஆம்புலன்ஸ்சை நிறுத்தியுள்ளார். இதன்மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே தேன்கனிக்கோட்டை பகுதியில் மலை கிராமங்கள் நிறைந்துள்ளது. இங்கு போதிய மருத்துவ வசதி இல்லாத நிலையில், பெரும்பாலான கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையையே நம்பியுள்ளனர். ஆனால், அதிவேகத்தில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களின் நிலைமையோ பரிதாபமாக உள்ளது. உரிய பராமரிப்பின்றி காணப்படும் ஆம்புலன்ஸ்கள் மேடு, பள்ளமான சாலைகளில் பயணப்படும்போது அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நின்று விடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், உடல்நலம் பாதிப்பால் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், உயிர்பலி அபாயம் அதிகரித்து வருகிறது. எனவே, புதிய 108 ஆம்புலன்ஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.


Tags : nowhere ,
× RELATED அனைத்து மதுபான கடைகளும் 5 ஆண்டுகளில்...