அரூர் நகரில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் மக்கள் கடும் அவதி

அரூர், செப். 20: அரூர் நகரில் சாலை விரிவாக்கப் பணிக்காக மின்கம்பங்களை மாற்றியமைக்க, முன் அறிவிப்பு இல்லாமல் மின்நிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அரூர்-சேலம் பைபாஸில் கச்சேரி மேட்டில் இருந்து,  நடேசா பெட்ரோல் பங்க் வரை 2 கிலோ மீட்டர் தூர சாலையை, ₹7.90 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, சென்டர் மீடியன் அமைக்கும் பணி,  கடந்த மார்ச் மாதம் துவங்கியது. இந்த சாலையை விரிவாக்க பணிக்காக, பழைய சாலையில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் அகற்றும்பணி, புதிதாக மழைநீர் வடிகால் மற்றும் சிறிய பாலங்களை நீட்டிப்பு செய்யும் பணிகளை, நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் பழைய மின்கம்பங்களை அகற்றி, சாலையோரம் நடும் பணி நடப்பதாக கூறி, தினமும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. முன்னறிவிப்பு இல்லாமல் மின்நிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் மட்டுமின்றி கடைக்காரர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள், கடந்த 7 மாதங்களாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதில் பழைய மின்கம்பத்தை அகற்றி, சாலையோரம் நடுவதாக கூறி, கடந்த 3 நாட்களாக, அரூர் 4ரோடு, திரு.வி.க. நகர், கச்சேரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித முன் அறிவிப்பும்  இல்லாமல் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மின்நிறுத்தம் செய்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் கேட்டால், சரியான பதில் அளிப்பதில்லை. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தனியார் மருத்துவமனையில் பணிகள் பாதிக்கப்படுகிறது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிகள் பாதிக்கிறது. மின்மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மின்வாரிய அதிகாரிகள் மின்நிறுத்தம் குறித்து முறையாக அறிவித்து, இடைப்பட்ட மதிய நேரத்தில் மின்விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Aroor ,
× RELATED சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் இன்று அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் வாபஸ்