×

மணல், பழம் ஏற்றிச்சென்ற பிக்கப் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலி

பாலக்கோடு, செப்.19: பாலக்கோடு அருகே கொய்யா பழம் லோடு ஏற்றிச்சென்ற பிக்கப் வேன் சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த டிரைவர் உள்பட 2 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் இருந்து, வெள்ளிச்சந்தைக்கு கொய்யா பழம்  ஏற்றிக்கொண்டு பிக்கப் வேன் ஒன்று சென்றது. இந்த வேனை உரிமையாளரும், டிரைவருமான முனியப்பன் மகன் பிரகாஷ்(22) ஓட்டிச்சென்றார். அவருடன் சங்கர் மகன் சூர்யா(20) உடன் சென்றுள்ளார். வண்டியின் பின்புறம் பிளாஸ்டிக் பெட்டிகளின் மேற்பகுதியில், கொலசஅள்ளியை சேர்ந்த முத்து மகன் முனிராஜ்(46) உட்கார்ந்து சென்றுள்ளார். இந்த வேன் நேற்று மாலை 6.30 மணியளவில் நாராயணன் கொட்டாய் என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 இதில் வேனில் இருந்த பழ பெட்டிகள் பள்ளத்தில் விழுந்தது. பெட்டிகளுக்கு அடியில் சின்னாற்றில் இருந்து மணல் கடத்திச்சென்றது தெரியவந்தது. மேலும், வேனின் அடியில் சிக்கிய முனிராஜ், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவர் பிரகாஷ், உடன் சென்ற சூர்யா ஆகியோர் படுகாயமடைந்தனர்.  அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாரண்டஅள்ளி போலீசார், முனிராஜின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காய்கறி பெட்டிகளுக்கு அடியில் மணல் கடத்தி வந்தது, விபத்து ஏற்பட்டது குறித்து வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா