×

பல்வேறு தொழில்களில் இருந்து மீட்கப்பட்ட 374 சிறார்களுக்கு சிறப்பு பயிற்சி

தர்மபுரி, செப்.19: தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் மலர்விழி தலைமை வகித்து பேசியதாவது:தர்மபுரியை சேர்ந்த எம்.மூர்த்தி என்ற குழந்தை, தொழிலாளராக மீட்கப்பட்டு, பள்ளியில் சேர்த்து, தற்போது மருத்துவ படிப்பு முடித்து, புதுக்கோட்டை அருகே  பொன்னமராவதி ஆரம்ப  சுகாதார நிலையத்தில் மருத்துவராக சேர்ந்துள்ளார். இது பாராட்டுக்குரியது. இம்மாணவர் உருவானதற்கு இத்திட்டம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளே காரணம். குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்தால் உடனடியாக 1098 எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களுக்கு, சிறப்பு பயிற்சி மையத்தின் மூலம் மறுவாழ்வு வழங்கலாம். தர்மபுரி மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் எவரும் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும், தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மேலும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மைய சிறார்கள் தயாரித்துள்ள 10 ஆயிரம் விதை பந்துகள் போன்று கல்வித்துறையும் 15 லட்சம் விதை பந்துகளை தயாரிக்கவும் உள்ளனர் என  திட்ட இயக்குநர் சரவணன் எடுத்துரைத்தார். இத்திட்டத்தில் 116 முன்னாள் குழந்தை தொழிலாளர் மாணவர்கள் 2019-2020ம் ஆண்டில் பல்வேறு உயர்கல்வி பயின்று வருகின்றனர். தற்போது, இத்திட்டத்தின் கீழ் 22 சிறப்பு பயிற்சி மையங்களில், பல்வேறு தொழில்களில் இருந்து மீட்கப்பட்ட 374 சிறார்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அனைத்து வசதிகளும் அரசு அளித்து வருகிறது. இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான், சப்கலெக்டர் சிவன் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சரவணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் நாகலட்சுமி, முதன்மை கல்வி ஆலுவலர் (பொ) கணேஷ்மூர்த்தி, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் திட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : minors ,
× RELATED அரசு கூர்நோக்கு சிறப்பு இல்லத்தில்...