×

நாமகிரிப்பேட்டை அருகே கொடி தக்காளிக்கு கயிறு கட்டும் பணி

நாமகிரிப்பேட்டை, செப்.17: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா பகுதியில், கொடி தக்காளிக்கு கயிறு கட்டும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மெட்டாலா, கார்கூடல்பட்டி, உரம்பு, சிங்கிலியன்கோம்பை, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கொடி தக்காளி அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. ஒட்டுவீரிய முறையில் உருவாக்கப்பட்டுள்ள கொடி தக்காளி செடிகள் அதிக விளைச்சல் தரக்கூடியவை. உரிய முறையில் பராமரிப்பு செய்தால், 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். தொடர்ந்து 9 மாதங்கள் வரை தக்காளி அறுவடை செய்ய முடியும். கொடி தக்காளியை பொறுத்தவரை, கொடியை கீழே படர விடாமல், கயிற்றால் மேலே கட்ட வேண்டும். அப்போது தான், கொடி அழுகாமல் பூக்கள் அதிகம் பூக்கும். தற்போது, மெட்டாலா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தக்காளி தோட்டங்களில், கொடியை கயிற்றால் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பூக்கள் அதிகம் பூத்துள்ள இந்த செடிகளில், அடுத்த சில வாரங்களில் தக்காளி அறுவடை தொடங்கி விடும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Namagiripet ,
× RELATED நாமகிரிப்பேட்டை அருகே தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு மாணவன் பலி