×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ பிரிவில் வழக்கு

புதுச்சேரி, செப். 15:  வில்லியனூர் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது போக்சோ பிரிவில் வழக்குபதிந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வில்லியனூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அங்குள்ள சமூக அறிவியல் ஆசிரியரான ராஜசேகரன் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் தரப்பில் புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு நலக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
 இதையடுத்து அப்பள்ளியில் குழந்தைகள் நலக்குழு நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். இதில் மாணவிகள் கூறிய குற்றச்சாட்டில் உண்மைதன்மை இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலக்குழு சேர்மன் ராஜேந்திரன், சீனியர் எஸ்பிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் தற்போது வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியரான ராஜசேகரன் மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்தனர். அவரை கைது செய்ய சோலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு தனிப்படை சென்றபோது ராஜசேகரன் அங்கிருந்து மாயமாகி இருப்பது தெரியவந்தது.

 இதையடுத்து தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே பாலியல் புகாரில் வழக்குபதிவு செய்யப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த முடிவு செய்துள்ள கல்வித்துறை அதிகாரிகள், ஓரிரு நாளில் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Tags : Paxo ,state school teacher ,sexual harassment ,
× RELATED மந்தைவெளிப்பாக்கம் பகுதியில் போக்சோ...