×

இயந்திர நெல் நாற்று நடவு செய்தால் கூடுதலாக 20 சதவீதம் மகசூல் பெறலாம்

ஈரோடு, செப். 15:  இயந்திர நெல் நாற்று நடவு மூலம் வழக்கத்தை விட கூடுதலாக 20 சதவீத மகசூல் பெறலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன், மேட்டூர் மேற்கு உள்ளிட்ட அனைத்து முக்கிய பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து நெல் நடவு செய்வதற்கான முன்னேற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். மெயின் வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் கொப்பு வாய்க்கால்கள் மூலம் வயல்வெளிகளுக்கு சென்றுள்ளதையடுத்து நடவுக்கு முந்தைய பணிகளான பரம்படித்தல், வரப்பு போடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கமான நாற்று நடவை விட இயந்திரங்கள் மூலம் நாற்று நடவு செய்தால், கூடுதலாக 20 சதவீத மகசூல் பெற முடியும் என்பதால் விவசாயிகள் இயந்திர நடவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் பிரேமலதா கூறியதாவது: விவசாயிகளுக்கு தேவையான ஏ.எஸ்.டி-16, பி.பி.டி-5204, கோ-50, கோ-51, சொர்ணாசப், டி.ஆர்.ஒய்-3 உள்ளிட்ட பல்வேறு சான்று பெற்ற நெல் விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. நெல் விதையோடு உயிர் உரங்கள் மற்றும் வரப்புப்பயிர் சாகுபடி செய்வதற்காக உளுந்து விதையும் சேர்த்து மானியத்துடன் வழங்கப்படுகிறது.
 கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வேளாண்மைத்துறை அறிமுகப்படுத்திய ஒற்றை நாற்று நடவு எனப்படும் இயந்திர நெல் நாற்று நடவு முறையால் 20 சதவீத கூடுதல் மகசூல் பெற முடியும்.

ஆட்கள் மூலம் கயிறு கட்டி வரிசை நடவு செய்வதில் பிரச்னைகள் இருப்பதால், இயந்திரம் மூலம் நடவு செய்வதில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். கூலி ஆட்கள் தட்டுப்பாடு, இடுபொருள் செலவு குறைவு, பூச்சி தாக்குதல் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இயந்திர நெல் நடவு நல்ல தீர்வாக உள்ளது. இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...