×

தேவாரம்-கம்பம் இடையே இயக்கப்படும் அரசுபஸ்களில் பராமரிப்பு குறைவு திண்டாடும் பயணிகள்

தேவாரம், செப்.11: தேவாரம்-கம்பம் பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பராமரிப்பு குறைவால் பயணிகள் திண்டாடுகின்றனர். பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாரத்தில் இருந்து பண்ணைப்புரம், கோம்பை, கம்பம், உத்தமபாளையம், போடி ஆகிய ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினந்தோறும் அதிகளவில் பயணிகள் செல்கின்றனர். இந்த பஸ்களின் உள்புறம் போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால் தினந்தோறும் பயணிகள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். சீட்களில் ஆணிகள் நீட்டிக்கொண்டு உள்ளன. படிக்கட்டுகளின் தகரங்கள் கூர்மையாக உள்ளதால் உடலில் காயங்கள்படுவது ஒருபுறம் என்றால் மறுபுறம் உள்புறம் சுத்தம்செய்யப்படாமல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.கம்பம், தேவாரம் டெப்போக்களில் இருந்து இயக்கப்படும் இத்தகைய பஸ்களால் பயணிகள் பெரும் பாதிப்பினை சந்திக்கின்றனர். குழந்தைகள், வயதானவர்கள் பஸ்களில் ஏறினால் உள்புறம் சுழன்றடிக்கும் தூசிகள் மனித உடலில் தானே மையம் கொண்டு அலர்ஜி, சளி, கண் பாதிப்பு, போன்ற நோய்களை தருகிறது.

பிரைவேட் பஸ்கள் போட்டிபோட்டு பஸ்களை பராமரித்து இயக்கும்போது அரசுபஸ்கள் என்ன காரணத்தினால் இப்படி இயக்கப்படுகிறது என்ற காரணம் தெரிவதில்லை. தினந்தோறும் டவுன்பஸ்களை உள்புறம் சுத்தம் செய்து பராமரிப்பதற்கென்றே பணியாளர்கள் உள்ளனர். இதற்காக சம்பளம் அதிகளவில் தரப்படுகிறது. ஆனால் டெப்போக்களில் இந்த பணிகளில் எதற்காக சுணக்கம் காட்டப்படுகிறது என்ற விபரம் தெரிவதில்லை. அரசுபஸ்களை நம்பி ஏறும் பயணிகளுக்கு தூசிமண்டலத்தை தருவது எவ்வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, அரசுபஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால் தினந்தோறும் பயணிகள் அவதிப்படுவது தொடர்கிறது. உள்புறமாக உள்ள இருக்கைகள் உட்காருவதற்கே லாயக்கில்லாமல் உள்ளது. தூசிகள் அதிகளவில் சேரும்போது அதனை தினந்தோறும் கூட்டி சுத்தம் செய்யவேண்டிய போக்குவரத்து துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் தேவாரம், போடி, உத்தமபாளையம், கம்பம் வழித்தடங்களில் இயங்கிடும் பஸ்களில் பயணம் செய்வதே போராட்டக்களமாக உள்ளது என்றனர்.

Tags : Travelers ,Devaram-Kampam ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை