திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் வரும் 30ம் தேதி நடக்கிறது

திருவண்ணாமலை, செப்.11: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீபத்திருவிழாவை தரிசிக்கின்றனர். அதன்படி, இந்த ஆண்டு தீபத்திருவிழா வரும் டிசம்பர் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, 10ம் தேதி மகா தீபப்பெருவிழா நடைபெறும்.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக, வரும் 30ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும். அன்று காலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தமும், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெறும். பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து, தீபத்திருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்ச ரதங்களை பழுது நீக்கி பவனிக்கு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Thiruvannamalai Carnival Deepakiruthivu Festival ,Annamalaiyar Temple ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...