மாவட்டத்தில் 1.50 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒன்றியம் பெரணமல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

திருவண்ணாமலை, செப்.10: பெரணமல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அறிவிக்கக்ேகாரி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ரத்தினசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வின்சென்ட் ராஜசேகர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 640 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.இந்நிலையில், பெரணமல்லூர் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த அனைத்து இயக்கங்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தெரிவித்திருப்பதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில், வந்தவாசி தாலுகா பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகப்பெரியதாகும். அதில், 8 குறு வட்டங்கள், 161 வருவாய் கிராமங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், வந்தவாசி தாலுகாவில் 4.50 லட்சம் மக்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதில், பெரணமல்லூர் ஒன்றியம் 1.50 லட்சம் மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஒன்றியமாகும். மேலும், வேலைவாய்ப்பு எதுவும் இல்லாத பின்தங்கிய பகுதியாகும். பெரணமல்லூருக்கும், வந்தவாசிக்கும் 25 கிமீ தொலைவு உள்ளது. மேலும், கடந்த 2011ம் ஆண்டு வரை பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதியாகவும் இருந்தது.மத்திய- மாநில அரசுகளின் ஒன்றிய அளவிலான அனைத்து அலுவலகங்களும் இங்கு செயல்படுகிறது. எனவே, பெரணமல்லூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.அதேபால், செங்கம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதில் அதிகாரிகள் முறைகேடாக பணம் வசூலித்துள்ளனர் என்பதால், அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.மேலும், திருவண்ணாமலை பல்லவன் நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதி மக்கள், நாவக்கரை பகுதியில் மயானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனு அளித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், கடந்த 2 வாரங்களாக அரசு விடுமுறை காரணமாக மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறவில்லை. எனவே, நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் வழக்கத்தைவிட மக்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. எனவே, நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர்.

Tags :
× RELATED ஆட்கள செட் பண்ணி அடிச்சதே கெஜ்ரிதான்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு