மாவட்டத்தில் உளுந்து குவிண்டால் ₹5700க்கு கொள்முதல்

கிருஷ்ணகிரி, ஆக.22: மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உளுந்து விலை குறைந்துள்ளதால், உளுந்து விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,260 ஹெக்டேர் பரப்பில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து 850 மெட்ரிக் டன் உளுந்து உற்பத்தியாகிறது. விலை ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, உளுந்துக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில், மாவட்டத்தில் தற்போது 500 மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி உளுந்து விவசாயிகளிடமிருந்து உளுந்து  கொள்முதல் செய்வதற்காக, தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் மூலம் போச்சம்பள்ளி மற்றும் ஒசூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்து கொள்முதல் செய்யப்படும்.

மத்திய அரசால் 2019 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையான ஒரு குவிண்டாலுக்கு 5700 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் பணி கடந்த 1ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 29ம் வரை நடைபெறும். விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம். பெயர்களை பதிவு செய்யும்போது, நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான நாப்பெட் நிறுவனம் பரிந்துரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் உளுந்து இருத்தல் அவசியமாகும். விவசாயிகள் இத்தரத்தினை உறுதிசெய்து குறைந்தபட்ச ஆதார விலை பெற்றிடலாம். தமிழகத்தில் உளுந்து கொள்முதலுக்கு தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மாநில முகமையாக செயல்படுகிறது.

உளுந்துக்கான தொகையை விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. சேமிப்புக் கிடங்குகளில் உளுந்து சேர்க்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும். உளுந்துக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்திட்டத்தினை அனைத்து உளுந்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநர் அலுவலகம், ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகம், அம்சா உசேன் வீதி, புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி  என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி